கள்ளக்குறிச்சி, விஜய் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

தோளில் சாய்ந்து கண்ணீர்விட்டு கதறியழுத பெண்.. பாதிக்கப்பட்டவரின் கையை பிடித்து ஆறுதல் கூறிய விஜய்!

Prakash J

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தவெக தலைவர் விஜய்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள், இதற்கென அமைக்கப்பட்ட சிபிசிஐடி போலீசார் என பல்வேறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க: 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!

இவர்களைத் தவிர எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சிக்குச் சென்ற உயிரிழந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். இதனால் திரும்பும் திசையெல்லாம் அரசியல் வாகனங்களைப் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கள்ளக்குறிச்சி புறப்பட்டுச் சென்றனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

முதலில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை செல்ல இருக்கும் நடிகர் விஜய், அதனை தொடர்ந்து பாதிக்கபட்ட நபர்களின் இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் என தகவல்கள் வெளியானது. முன்னதாக நடிகர் விஜய் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டு தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இதற்கு முன்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும், நீட் விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதெல்லாம் அவர் சந்தித்த பிறகே அதுதொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியே வந்தது.

இதையும் படிக்க: முதல் தென்கிழக்கு ஆசிய நாடு| தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்தது தாய்லாந்து!

இந்நிலையில், மாலை 6.30 மணியளவில் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்த விஜய் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமும் நலம் விசாரித்தார்.

அத்துடன் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது விஜய்யிடம் பாதிக்கப்படவரின் உறவினர் பெண் ஒருவர் கதறி அழுதார். தோளில் சாய்ந்து அழுத அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறினார் விஜய்.