செய்தியாளர்: R. ரவி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற 27ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு தொடர்பாக தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட 30 குழுக்களின் பிரதிநிதிகள், தொகுதி பொறுப்பாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த பத்திரிகையாளர்கள் அய்யநாதன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக இந்த பயிலரங்கத்தை தொடங்கிவைத்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், “பெற்றோரைத் தவிர யார் காலிலும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் விழக் கூடாது” என அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “உழைப்பவர்களுக்கு எதிர்பார்ப்பில்லாமல் அங்கீகாரத்தை கட்சியில் தலைவர் விஜய் வழங்குவார். இக்கட்சியில் நான் நிரந்தர பொதுச்செயலாளர் இல்லை. இப்பதவி தளபதி எனக்கு வழங்கியது. எப்போது வேண்டுமானாலும் இதை அவர் மாற்றலாம்.
நம் கட்சியில் பதவி என்பது யாருக்கும் நிரந்தரம் இல்லை. தளபதி ரசிகர் என்ற பதவியே என்னோடு இருக்கும். வாழ்நாள் முழுக்க தளபதியோடு இருக்கவே நான் விரும்புகிறேன்” என்று பேசினார். முன்னதாக சேலம் மாவட்ட தவெக பொறுப்பாளர் பார்த்திபன், ஆனந்தை வரவேற்று காலில் விழுந்து வணங்கினார்.