தவெக விலையில்லா விருந்தகம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை: தவெகவை ஒடுக்கும் காவல்துறை? ‘விலையில்லா விருந்தகம்’ திடீர் அகற்றத்தால் வெடித்த சர்ச்சை!

மக்களுக்கு 150 நாட்களாக உணவு வழங்குவதை தடுப்பதாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புகார்.. எந்த முன்னரிவுப்பும் இல்லாமல் அகற்றப்பட்ட பூத்.. உடனடியாக தவெகவினர் கையில் எடுத்த அஸ்திரம்..! என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு 

மதுரையில் மத்திய தொகுதிக்குட்பட்ட நேதாஜி ரோடு பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.

கடந்த 150 நாட்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நேதாஜி ரோடு பகுதியில் உணவு வழங்குவதற்காக தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பூத்தை, மதுரை மாநகராட்சி நிர்வாகிகளும், காவல்துறையினரும் சேர்ந்து அகற்றியுள்ளனர்.

தவெக விலையில்லா விருந்தகம்

மதுரை மாநகராட்சியிடமும், காவல் துறையிடமும் உரிய முறையில் கடிதம் கொடுத்து வாய் மொழியாக அனுமதி பெற்று உணவு வழங்கி வந்த நிலையில், சில அழுத்தம் காரணமாக உணவு வழங்க பயன்படுத்தப்பட்ட பூத் அகற்றப்பட்டுள்ளதாக தவெக சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

பூத் பறிமுதல் செய்யப்பட்டபோதும், பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்குவது தடைபடக்கூடாது என்று நினைத்த தவெகவினர், மீண்டும் ஒரு புதிய பூத்தை தயார் செய்து அதன்மூலம் உணவு வழங்கி வருகின்றனர். இதனையும் தடுத்தால் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று கூறும் தவெகவினர், தங்கள் செயல்பாடுகளை திட்டமிட்டு தடுப்பதாகவும், சில அழுத்தம் காரணமாக இதனை செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது “தவெகவினர் உணவு வழங்குவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், பூத்தினை மதுரை மாநகராட்சி அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதனால்தான் அந்த பூத் அகற்றப்பட்டது. உணவு வழங்க காவல்துறையினர் உரிய அனுமதி அளித்தால் மாநகராட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார்.