தவெக தலைவர் விஜய் PT
தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தல்| ”தருமபுரியில் விஜய் போட்டியிடுவார் ..” - மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டியிடுவார் என தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா மேடையில் பேசும்போது வெளிப்படுத்தியுள்ளார்.

PT WEB

தன்னுடைய சினிமா கரியரை விட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அக்டோபர் 27 அன்று தவெகவின் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி அதில் பரபரப்பான கொள்கைகள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அரசியலில் எண்ட்ரி கொடுத்தார்.

முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய், “திராவிட மாடல் அரசியலை எதிர்க்கிறோம், மதவாத பிரிவினை அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு” என பல அதிரடியான கருத்துகளை முன் வைத்தார். அதிலும் அவர் வைத்த கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தானது தமிழக அரசியல் களத்தில் பெரிய பேசுபொருளாக மாறி பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

தவெக மாநாடு விஜய்

தொடர்ந்து தன்னுடைய அரசியல் வருகையை பல வகையில் வெளிப்படுத்திய விஜயின் தவெக கட்சி, 10 மாதத்தில் 10 மில்லியன் உறுப்பினர்களை சேர்த்து வலுவான வேலையை செய்துவருகிறது. அதிலும் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி, திமுகவை சேர்ந்த ஆயிரக்கான தொண்டர்கள் தங்களை தவெக கட்சியில் இணைந்துகொண்டதும் பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு பெரிதாகவே இருந்துவருகிறது. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என அம்மாவட்டத்தின் தவெக கட்சி தலைவர் நா.ப.சிவா வெளிப்படுத்தியுள்ளார்.

தருமபுரியில் போட்டியிடுவார் விஜய்..

தருமபுரியில் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் நா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். பின்னர் நிர்வாகிகளிடையே தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா பேசினார்.

தா.ப.சிவா

அப்போது பேசிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார் என தெரிவித்தார். அதைக்கேட்ட கட்சி தொண்டர்கள் கரகோஷத்துடன் கைத்தட்டி ஆராவாரம் செய்தனர். உண்மையில் விஜய் தருமபுரியில் தான் போட்டியிடுவாரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.