தவெக மாநாடு pt
தமிழ்நாடு

’விஜய் சொன்ன ஒரே வார்த்தை.. அடுத்த நாளே..’- அரசியல் பயிலரங்கம்.. என்.ஆனந்த் பேச்சு To அய்யநாதன் உரை!

தமிழக வெற்றிக் கழத்தின் மாநாட்டு தேதி நெருங்கிவிட்ட நிலையில், சேலம் ஆத்தூரில் பொறுப்பாளர்கள் பங்கேற்ற அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.

யுவபுருஷ்

தமிழக வெற்றிக் கழத்தின் மாநாட்டு தேதி நெருங்கிவிட்ட நிலையில், அதற்கான பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் நடத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார் கட்சியின் தலைவர் விஜய்.

அவர் போட்ட உத்தரவை அடுத்து, சேலம் ஆத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தவெகவின் மாநாடு பொறுப்பாளர்கள் அனைவருடன் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், பேச்சாளர் மற்றும் அரசியல் திறனாய்வாளர் ராஜ்மோகன் பங்கேற்க ஆனந்த் முன்னிலையில் பயிலரங்கம் நடைபெற்றது.

யார் காலிலும் விழக்கூடாது..

தமிழக வெற்றிக் கழத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற 27ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் வி.சாலை எனும் கிராமத்தில் நடக்க இருக்கிறது. மழை, காலநிலை இவற்றை எல்லாம் கடந்த கடகடவென நடந்து வருகிறது மாநாட்டுப் பணிகள். மாநாட்டிற்கான வேலையிலும், பொறுப்பாளர்கள் மிகுந்த உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். "வெற்றிக் கொள்கைத் திருவிழா" என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கட்டுக்கோப்பாக, ஒழுக்கமான முறையில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மாநாடு நடக்க வேண்டும் என்று நினைத்த விஜய், பயிலரங்கம் நடத்துமாறு பொதுச்செயலாளர் ஆனந்திடம் கூறியுள்ளார்.

அவரும் சேலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகியிடம் கூற, இதோ அண்ணே என்று ஐந்தே நிமிடத்தில் ஆத்தூரைச் சேர்ந்த திருமண மண்டபத்தை புக் செய்து கொடுத்து பயிலரங்க வேலைகளை செய்துள்ளனர் அம்மாவட்ட நிர்வாகிகள். சாலையில் பேனர் வைப்பது, கொடி நடுவது என்று தடபுடலாக ஏற்பாடுகள் நடந்த நிலையில், அனைத்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கான பொறுப்பாளர்கள் ஒன்று கூடினர். இதில் முதலில் பேசிய ஆனந்த், நிரந்தர பொதுச் செயலாளர் என தனக்கு வரவேற்பு பதாதைகள் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இப்படி எல்லாம் செய்ய வேண்டாம். நான் கடைசி வரை தளபதியின் ரசிகனாக இருக்க விரும்புகிறேன். தவெகவில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. நமது கட்சியின் தோழர்கள், தாய் தந்தையைத் தாண்டி வேறு யாரின் காலிலும் விழக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பேசினார்.

கடந்த சில தினங்களாக, தன்னை சந்திக்கும் சில நிர்வாகிகள் காலில் விழ முயன்றதையும், அது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் விமர்சனத்திற்குள்ளானதையும் கவனித்தே, இது போன்ற பழக்கம் நமக்கு இருக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஆனந்த்.

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பேசியது என்ன?

தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், பேச்சாளர் ராஜ்மோகன் ஆகியோர் உரையாற்றினர்.

அப்போது, தவெக எனும் கட்சி எப்படி இருக்க வேண்டும். மாநாடு எப்படி நடக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் என்னென்ன என்று பட்டியலிட்டு பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், ”கட்சி தொடங்குவதற்கு முன்பே விஜய் மக்கள் மன்றத்தை சார்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது அதிர்வலைகளை ஏறபடுத்தியதாக கூறினார். நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விஜய் பேசியது தன்னை ஈர்த்ததாகவும், அனைத்து தளத்திலும் அவர் மீதும், கட்சியினர் மீதும் நம்பிக்கை இருப்பதாகவும்” பேசி அமர்ந்தார் அய்யநாதன்.

அரசியல் தளத்தில் மூத்த பத்திரிகையாளராகவும், அரசியல் திறனாய்வாளராகவும் இருக்கும் அய்யநாதன், நடுநிலையோடு அனைத்து விஷயங்களையும் அனுகக்கூடியவர். அண்ணா காலம் தொட்டே பல அரசியல் தலைவர்களோடு பழகி, அரசியல் சூழலை ஆழமாக கற்றவர். இதனாலேயே அரசியல் குறித்த அவரது பாடம் சரியாக இருக்கும் என்று தவெகவினர் அய்யநாதனை அழைத்ததாக தெரிகிறது. அதேபோல், விஜய் மீது அபிமானம் கொண்ட ராஜ்மோகன் உரையாற்றுகையில், பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு பேசினார்.

அரசியல் திறனாய்வாளர் ராஜ்மோகன் பேசியது என்ன?

அதேபோல், விஜய் மீது அபிமானம் கொண்ட ராஜ்மோகன் உரையாற்றுகையில், பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், மாநாட்டில் கலந்துகொள்ளும்போது ஈகோ இருக்கக்கூடாது. நமக்கு பாதுகாப்பு தரும் காவல்துறைக்கே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு சிறு தவறுகூட நடந்துவிடக்கூடாது என்று பேசினார். மக்களிடம் செல், அவர்கலோடு வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள் என்று அண்ணா சொன்னார். அப்படி மக்களிடம் சென்றுகொண்டிருக்கிறார் விஜய் என்று சிலாகித்து பேசினார்.

இந்த பயிலரங்கில் வந்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நிர்வாகிகள் பேசினர். குறிப்பாக, உணவுக்கு முன்பு பங்கேற்ற இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு தொழுகை செய்ய தனி இடமும் ஒதுக்கப்பட்டது.

மாநாடு எப்படி கட்டுக்கோப்பாக நடைபெற வேண்டும் என்று நடத்தப்பட்ட இந்த பயிலரங்கில் பங்கேற்ற நிர்வாகிகள், பயிரலங்கமே மாநாடு போல் இருப்பதாகவும், மாநாடு எப்படி இருக்கும் என்பதை பாருங்கள் என்றும் சிலாகித்து வருகின்றனர்.