தவெக மாநாட்டுக்கு அனுமதி கோரிய கட்சியினர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி மனு!

நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தன் முதல் மாநாட்டுக்கு தயாராகி வருகிறது. அந்தவகையில் மாநாடு நடத்த அனுமதிக்கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இன்று மனு கொடுத்துள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தன் கட்சியின் முதல் மாநாட்டினை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதிக்கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இன்று கடிதம் வழங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டு வந்தார். இதற்காக இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவும் பிறப்பித்திருந்தார். அவர்கள் பரிந்துரையின் பேரில் சில இடங்களும் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் எங்கும் அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் முதல் மாநாட்டை நடத்த 85 ஏக்கர் பரப்பளவில் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் உள்ள தனியார் நிலம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை வாடகைக்கு கேட்டு நிர்வாகிகள் தேர்வு செய்து வைத்துள்ளனர்.

23.09.2024 ஆம் தேதி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள அந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு, தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் இன்று மனு அளித்தனர்.

தவெக-வின் அனுமதி மனு

இது குறித்து தெரிவித்த பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “விக்கிரவாண்டியில் 85 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுத்து தவெக சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில், கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்பதால் 1.5 லட்சம் பேர் கூடுவார்கள். அதற்கு இருசக்கர வாகனங்கள், வாகனங்கள் நிறுத்த 5 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகமான நிர்வாகிகள் வருகை புரிவார்கள் என்பதால் மூன்று வழிகள், கழிவறைகள், தண்ணீர் வசதி, உணவு, ஆம்புலன்ஸ் நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தீயனைப்பு துறையினர் அனுமதியும், காவல் பாதுகாப்பு வழங்க அனுமதியும் மாநாட்டிற்கு தேவை.

தவெக-வின் அனுமதி மனு

அதை இன்று கோரியுள்ளோம். மாநாட்டிற்கான அனுமதி கிடைத்தவுடன் விஜய் மாநாட்டின் தேதியை அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.