செய்தியாளர்: மணிசங்கர்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் சென்றாயப் பெருமாள். இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்ட நிலையில், தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பார்வை மாற்றுத்திறனாளியான இவர், கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவர் தந்தை ஜெயராஜ் மற்றும் தாயார் ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்றாய பெருமாள் தனக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதையடுத்து அவர் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து சென்றாய பெருமாள் கொடுத்த கோரிக்கை மனுவிற்கு, அவருடைய தந்தை ஜெயராஜ் இறந்துவிட்டதாகவும், அவருடைய தந்தைக்கு சென்றாய பெருமாள் மட்டுமே வாரிசு என்பதால், ஜெயராஜூக்கு இருக்கக்கூடிய 36.66 சதுர மீட்டர் இடம் இருப்பதால் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாது என்றும் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பதில் கொடுத்துள்ளனர்.
ஜெயராஜ் உயிரோடு இருக்கும் நிலையில், அவர் இறந்து விட்டதாக தாலுகா அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலால் சென்றாய பெருமாள் அதிர்ச்சி அடைந்துள்ளார். உயிரோடு இருக்கும் நபரை எப்படி உயிரோடு இல்லை என்று சொல்லலாம் என்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாலுகா அலுவலகத்தில் கேட்டபோது, அவருக்கு முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். இது குறித்து சென்றாய பெருமாள் கூறும் போது...
”எனது மனைவி இறந்து விட்ட நிலையில், பார்வை மாற்றுத் திறனாளியான நான் இரண்டு குழந்தைகளை வைத்து சிரமப்பட்டு வருகிறேன், எனது தந்தையும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், எனது தந்தை, தாய் தனியாக வசித்து வருகின்றனர், நான் எனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இலவச வீட்டு மனை பட்டா கேட்டபோது, எனது தந்தை இறந்து விட்டதாகவும், எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க முடியாது என்று பதில் அளித்துள்ளனர். எனது தந்தை உயிரோடு இருக்கும்போது, இறந்துவிட்டதாக கூறியது எங்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், இல்லையென்றால் வரும் திங்கட்கிழமை குடும்பத்துடன் தீக்குளிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எட்டையாபுரம் வட்டாட்சியர் சங்கரநாராயணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ”இப்பிரச்னை குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. சென்றாய பெருமாள் தந்தையை இறந்து விட்டதாக தவறுதலாக அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது. அவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வருவாய்த் துறை வழங்க தயாராக இருக்கிறது.
ஆனால் அவர், குடியிருக்கும் பகுதிக்கு அருகில் குறிப்பிட்ட இடத்தை கேட்பதால் அந்த இடத்தை தவிர்த்து வேறு இடத்தை உடனடியாக வழங்க தயாராக இருக்கிறோம்; இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.