தமிழ்நாடு

தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

webteam

தூத்துக்குடியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தையா, ஷண்முகம், மனிராஜ், ஸ்நோலின், வினிதா, கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ், ரஞ்சித்குமார், தமிழரசன், கார்த்திக் ஆகிய 10 பேர் உயிரிழந்தனர். இது தவிர சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே கலங்கடித்தது. பல அரசியல் தலைவர்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நிலைமை கட்டுப்படுத்த வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என பலரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மருத்துவமனையில் கூடியிருந்தவர்களை கலைந்து போகுமாறு காவல்துறையினர் கூறினர். அத்துடன் காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய மக்கள் மோதத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. போராட்டக்காரர்களின் கல்வீச்சில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட 10 காவலர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில், காளியப்பன் (22) என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனால் துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.