தமிழ்நாடு

‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை

‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை

webteam

தூத்துக்குடியில் வசிக்கும் நரிக்குறவர்கள் தங்களுக்கு வாழ்வதற்கு வீடில்லை எனவும், அதனால் பிள்ளைகள் படிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி புதியபேருந்து நிலையம் அருகே நரிக்குறவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். முதலில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது மாற்றப்பட்ட இச்சமுதாயத்தினர், தற்போது புதியபேருந்து நிலையம் பகுதியில் நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ளனர். 

பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் வசித்துவரும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு அமைத்துத்தர வேண்டுமென அவர்கள் கோரிக்கைகளை வைத்திருந்தனர். இதுதொடர்பாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல்  10ஆம் தேதியன்று முன்னாள் ஆட்சியர் ரவிகுமார், அனவரதநல்லூர் அருகே உள்ள பரம்பு பகுதியில்  நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 18 குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.  இதனையடுத்து நரிக்குறவர்களுக்கு விரைவில் பசுமை வீடுகள் அல்லது இந்திராகாந்தி நினைவு திட்டத்தின்கீழ்  குடியிருப்புகள் வழங்கப்படுமென தெரிவித்திருந்தார். 

முதலில் நரிக்குறவர்கள் அப்பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து இருந்தால் மட்டுமே இருப்பிடச்சான்று உள்ளிட்டவைகள் வழங்கமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நரிக்குறவர்கள் அப்பகுதிக்கு சென்று தற்காலிக கூடாரம் அமைக்க முற்பட்டபோது, முற்றிலும் பரம்பு பகுதியாக இருந்ததால் கூடாரம் அமைக்க இயலவில்லை. இதையடுத்து தங்களுக்கு பரம்பு பகுதியை சீரமைத்து தரவும், குடியிருப்புகளை அமைத்துத்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

பின்னர் பரம்பு பகுதியில் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் அருகே வசித்தே வருகின்றனர். இந்நிலையில் பெய்துவரும் மழையின் காரணமாக கூடாரத்திற்குள் இருக்க முடியவில்லை என்றும், இதனால் பேருந்து நிலையத்தில் படுக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது வாக்குரிமை வழங்கப்பட்டாலும் கூட, நிரந்தர வாழ்விடம் இல்லை என்றும் வருந்துகின்றனர். தங்களுக்கு குடியிருக்க வீடில்லாத காரணத்தினால், தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.