தமிழ்நாடு

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் நிவாரண நிதி ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் நிவாரண நிதி ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணத்தை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடியில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் சென்று சந்தித்த போது, நிவாரணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலும், நிவாரண நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதையும், அரசு பரிசீலித்து நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ளதாக கூறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் தற்போதைய உத்தரவுப்படி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணத்தை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் லேசான காயமடைந்தவர்களுக்கான நிவாரணம் ரூபாய் ஒரு லட்சத்தில் இருந்து, ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.