school building pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி: களையிழந்த பள்ளியை கலர்ஃபுல்லாக மாற்றி அசத்திய முன்னாள் மாணவர்கள்!

விளாத்திகுளம் அருகே படித்த பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள் ரூ.50 லட்சம் செலவில் பள்ளியை கலர்ஃபுல்லாக மாற்றி அசத்தியுள்ளனர்.

webteam

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டு பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியின் நிலையைக் கண்டு பெரும் மனச்சோர்வும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது.

school

இதையடுத்து பள்ளியின் அடிப்படை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும் அங்கு பயிலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவும் வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது இந்தப் பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக களையின்றி காணப்பட்ட பள்ளி கட்டடங்கள் முழுவதும் கலர்ஃபுல்லாக மாற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டடம், முகப்பு வாயில் என அனைத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிட்டு வந்த முன்னாள் மாணவர்கள் பள்ளியின் நிலையை கண்டு தங்களுக்குள்ளாகவே நிதியைத் திரட்டி ரூ.50 லட்சம் மதிப்பில் பள்ளியை சீரமைத்து அசத்தியுள்ளனர்.

வருகின்ற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில், பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்கள் திரண்டு மிகச் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனராம்!