டியூசன் ஆசிரியையிடம் 11 ஆம் வகுப்பு மாணவன் தகாத முறையில் நடக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி (25). இவர் பி.எட்., படித்து முடித்துவிட்டு தனது வீட்டில் 15 மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் (16) டியூசன் படித்து வந்துள்ளார். இந்த மாணவர் களியல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாணவன் ஜெனிஸ், டியூசன் ஆசிரியை மெர்லின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மெர்லின் மாணவரிடம் பள்ளிக்கூடம் செல்லவில்லையா எனக் கேட்டுள்ளார். அப்போது திடீரென்று மாணவன் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்டுள்ளார். உடனே மாணவன் ஜெனிஸ் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மெர்லினின் உடலில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் தவித்த ஆசிரியையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கத்திகுத்தில் மெர்லின் அடிவயிறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில், ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டு அருகில் உள்ள டியூசன் ஆசிரியையிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொள்ள முற்பட்டது, அதற்காக அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, மாணவன் ஜெனிஸ் தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கடையாலுமூடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.