தமிழ்நாடு

”இந்த தீர்ப்பால் ஒரு பயனுமில்ல மிஞ்சிப்போனா 5,000 வாக்கு கிடைக்கும்” - TTV தினகரன் பொளேர்!

”இந்த தீர்ப்பால் ஒரு பயனுமில்ல மிஞ்சிப்போனா 5,000 வாக்கு கிடைக்கும்” - TTV தினகரன் பொளேர்!

JananiGovindhan

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேட்டியின் போது குறிப்பிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது, ”உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான். இந்த தீர்ப்பு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியை தராது. வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும். எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை சின்னம் இருந்தால் அது அ.தி.மு.க வை மேலும் பலவீனப்படுத்தும்.

ALSO READ: 

பொதுக்குழு குறித்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தர்ம யுத்தம் 1ல் ஒ.பி.எஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர் நடத்தும் தர்ம யுத்தத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2017 ஏப்ரல் மாதத்திலிருந்தே பா.ஜ.கதான் அதிமுகவை இயக்குகிறது. அதேபோல  நீதிமன்றங்களையும் பா.ஜ.கதான் இயக்குகிறதா என்பதை நான் கூற முடியாது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பல முறைகேடுகள் செய்வார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் அணியில் அ.ம.மு.க அங்கம் வகிக்கும். தனியாக களம் காணவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தீர்ப்பில் பின்னடைவை சந்தித்ததால் ஓ.பி.எஸ்-ஐ அமமுகவில் இணையுமாறு அழைக்க மாட்டேன். அது மனிதத் தன்மையும் அல்ல.” என்று டி.டி.வி. தினகரன் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, “கமலஹாசன் பேசுவதையெல்லாம் காமெடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார். தேர்தலில் பரப்பரை மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும். ஆளுநர் ரவி ஆளுநராக செயல்பட வேண்டும், அவர் பேசும் பேச்சு ஆளுநர் பதவிக்கும் அழகல்ல, அவருக்கும் அழகல்ல. அவர் மத்திய அரசின் பிரதிநிதி அதனால் அப்படி பேசுகிறார்.

ஆளுநர் பதவி என்பது தேவை இல்லை என்பதுதான் எல்லோருடைய நிலைப்பாடும். ஆனால் அந்த பதவி இருக்கும் போது ஆளுநரை மதித்துதான் ஆக வேண்டும். தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஆளுனரை மதித்துதான் ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு தர்ம சங்கடமான நிலை.”  என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.