தமிழ்நாடு

டிடிவி தினகரன் வெளியே வருவாரா? ஜாமீன் மனு மீது மே 31-ல் உத்தரவு

webteam

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்து, 5 நாட்கள் டெல்லி போலீஸார் விசாரித்தனர், பின்னர் மே.1 ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதிகள் டிடிவி தினகரனை மே 15 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 15 ஆம் தேதி கானொலிக்காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதிகள் மே 29 ஆம் தேதி வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.

மே 29 இன்றுடன் 15 நாட்கள் நீதிமன்றக்காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜீன் 12 ஆம் தேதி வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

இதனிடையே டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா இருவரின் ஜாமீன் மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்கள் இன்று முடிவடைந்தது. ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன் ஜாமீனில் வெளிவருவாரா என்பது வரும் மே 31 ஆம் தேதி தெரியவரும்.