அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்கியதற்கான காரணத்தை டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சசிகலா தான் அரசியலைவிட்டு விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ‘’அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டது எனக்கு சோகமாக உள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலே அப்படி சொன்னார்கள். தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளார்கள். தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் ஒதுங்க முடிவு செய்துள்ளார்.
அரசியலைவிட்டு ஒதுங்கினால் உடனே பின்னடைவு என்றெல்லாம் சொல்லமுடியாது. ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என சசிகலா தனது கருத்தை கூறியுள்ளார். எனது சித்தி என்பதற்காக சசிகலாமீது என் கருத்தை திணிக்கமுடியாது. அவரின் மனசாட்சியாக நான் பேசமாட்டேன். சட்டப்போராட்டம்மூலம் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா போராடிக்கொண்டிருக்கிறார்’’ என்று கூறினார்.