யூடியூபர் டிடிஎஃப் வாசன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன்.. ஏன்?

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசனை மதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.

PT WEB

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசனை மதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 15ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகவும், இதனை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் பேரில், மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக கார் ஓட்டியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சென்னையில் வைத்து வாசனை கைது செய்த காவல்துறையினர், அவரை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை இயக்கியதாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.