தமிழ்நாடு

தமிழக புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார் திரிபாதி

தமிழக புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார் திரிபாதி

webteam

புதிய டிஜிபியாக திரிபாதி பொறுப்பேற்றதையடுத்து டிஜிபி டி.கே ராஜேந்திரன் விடைபெற்றார்.

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த சட்டம் ஒழுங்கு ‌டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தின் 29 வது சட்டம் ஒழுங்கு ‌டிஜிபியாக திரிபாதி இன்று பொறுப்பேற்றார். 

அவர் பொறுப்பேற்றதை தொடர்ந்து டி.கே.ராஜேந்திரன் விடைபெற்றார். இதையடுத்து விடைபெற்ற டி.கே.ராஜேந்திரன் திரிபாதியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். டி.கே.ராஜேந்திரனுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர். 

டிஜிபியாக பொறுப்பேற்ற பிறகு திரிபாதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி எனவும் பாரம்பரியமிக்க தமிழக காவல்துறை தலைவராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் எனவும் தெரிவித்தார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற திரிபாதி ஐபிஎஸ் தமிழக காவல்துறையின் 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 

இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றி காவல்துறை சட்டம், ஒழுங்கு பணிகளில் பழுத்த அனுபவம் கொண்டவர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சியில் பணிபுரிந்தார். அதன்பின் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட இவர், தென்சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிர்வாகப் பிரிவு, தென்மண்டல ஐஜி, ஆயுதப்படை, கிரைம் ஐஜி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, காவல்துறை தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றி தனி முத்திரை பதித்துள்ளார். 

இதனையடுத்து ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையராக இரண்டுமுறை பதவி வகித்தார். பின்னர் சிறைத்துறை ஏடிஜிபியாகவும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாவும் பணியாற்றினார். மேலும் அமலாக்கப்பிரிவிலும் இவர் பணிபுரிந்துள்ளார். இறுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற இவரை, சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது. 

சிறைத்துறை ஏடிஜிபியாக பணியாற்றிய போது தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் மறுவாழ்வு பெறும் வகையில் மகாத்மா காந்தி கம்யூனிட்டி கல்லூரியை தொடங்கி வைத்தார்.