தமிழ்நாடு

“டிஜிட்டல் அந்தரங்கம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”- மேற்குவங்க எம்.பி மனு..!

“டிஜிட்டல் அந்தரங்கம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”- மேற்குவங்க எம்.பி மனு..!

Rasus

வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவோரின் அடையாளத்தை அம்பலப்படுத்துவது, அந்தரங்க உரிமையை பாதிக்கும் எனக் கூறி, இதுசம்பந்தமான வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச் சேர்க்கக் கோரி மேற்கு வங்க ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மஹுவா மோய்த்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஆன்லைன் குற்றங்களை கண்டுபிடிப்பது, தடுப்பதில் சமூக வலைதளங்களுக்கு உள்ள பொறுப்புணர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி., மஹுவா மோய்த்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தற்போது இந்த வழக்கின் விசாரணை போக்கு தனிநபரின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியில் கைதேர்ந்த நபர்கள், தங்கள் மொபைல் எண்களை மறைத்து மற்றவர்களின் எண்களுடன் தகவலை இணைத்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால், சாதாரணமானவர்களே பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் அந்தரங்கம் அப்படியே காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் இன்னும் இந்தியாவில் நிறைவேற்றப்படவில்லை எனவும், அந்த சட்டம் பற்றிய பொது விவாதங்களே நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.