இலவச அமரர் ஊர்தி சேவை pt web
தமிழ்நாடு

திருப்பூர்: ஒரு அமரர் ஊர்தியில் இரு உடல்கள்.. அரசு சேவையில் அவலம்.. நீதி கேட்கும் தந்தை!

PT WEB

திருப்பூரில் பிரமாண்டமாய் நிற்கிறது அரசு மருத்துவமனை கட்டடம். மருத்துவமனையின் வளாகத்தில் காத்திருந்த அமரர் ஊர்தியில், மகனின் உடலை ஏற்றுவதற்காக சென்ற தந்தை துரைராஜுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அமரர் ஊர்தியில் இருந்த குளிர்பதனப் பெட்டியில் ஏற்கெனவே ஒருவரது உடல் இருக்க, பெட்டிக்கு மேலே, இவரது மகனின் உடலை வைக்க மருத்துவமனை ஊழியர்கள் முயன்றனர். இதற்கு உயிரிழந்தவரின் தந்தை துரைராஜ், கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமரர் ஊர்தியின் அவலத்தை வீடியோ எடுத்து வெளியிட்டு நியாயம் கேட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாண்டிபிரபு குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது உடல் தந்தை துரைராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏழ்மை நிலையில் இருக்கும் பாண்டிபிரபுவின் தந்தை துரைராஜ், உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல, அரசு இலவச அமரர் ஊர்தி சேவையை நாடினார். அப்போதுதான் அரங்கேறியது இந்த அவலம்.

ஒரு அமரர் ஊர்தியில் இரண்டு உடல்களை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்றும், செல்லும் வழியில் உடலை இறக்கி வைத்துவிடுவோம் எனவும் அங்கிருந்த ஊழியர்கள் கூறியது கூடுதல் அதிர்ச்சி. இதுதொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவமனை டீன் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.

துரைராஜின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது மகனுக்கு தனி அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு, பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டதாக கூறினார். அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு உயிரற்ற உடலாக இருக்கலாம். ஆனால், உடனிருக்கும் உறவினர்களுக்கு அது பெரும் உணர்வு. அதை உணர்ந்து ஊழியர்கள் செயல்பட வேண்டும்!