திருச்சி கொலை சம்பவம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருச்சி | குடிபோதையில் தாக்கிய மூத்த மகன்... இளைய மகனுடன் சேர்ந்து கொலை செய்த தாய்!

திருச்சியில் குடிபோதையில் தாயை தாக்கி வந்துள்ளார் மூத்த மகன். இதனால் அந்த தாய், தன் இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகனை கொலை செய்துள்ளார். இதையடுத்து தாய், மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர் : லெனின்.சு

திருச்சி மாநகரம் பீமநகர் தேவர் காலனி புதுத் தெருவைச் சேர்ந்தவர் ராவுத்தர் முகமது. இவரது மனைவி பர்வீன் பானு (வயது 47). இவர்களுக்கு, தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாகீர் (வயது 27) என இரண்டு மகன்கள் உள்ளனர். ராவுத்தர் முகமது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது. மகன்கள் இருவரும் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவந்தனர்.

டிரைவர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிமுன் அன்சாரிக்கு திருமணமாகி இருக்கிறது. அவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தமிமுன் அன்சாரி, தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து, அவரது தாய் மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி நேற்றும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாயையும், தம்பியையும் தாக்கியிருக்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தாயும், தம்பியும் சேர்ந்து தமிமுன் அன்சாரியை கீழே தள்ளி இருக்கிறார்கள். கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு மயங்கிய அவரை, கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு அவரது உடலை, காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றுக்குள் வீசி விடலாம் என்று திட்டமிட்டு, ஆட்டோவில் அவரது உடலை ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். காவிரிப் பாலத்தில் நிறைய பேர் படுத்திருந்ததால், அங்கு அவர்களால் உடலை வீச முடியவில்லை. இதையடுத்து, திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் பாலத்திற்கு சென்றுள்ளனர்.

தமிமுன் அன்சாரி உடல் மிகவும் கனமாக இருந்ததால் இருவரும் சேர்ந்து அவரை ஆற்றுக்குள் தூக்கி வீச முடியவில்லை. அதனால் பாலத்தின் ஓரத்திலேயே உடலை வீசிவிட்டு சென்றுவிட்டார்கள் என்பது போலீசாரின் விசாரணையில்  தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.