தமிழ்நாடு

ஆய்வாளர் உதைத்ததில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை

ஆய்வாளர் உதைத்ததில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை

webteam

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர், எட்டி உதைத்ததில் இளம்பெண் உஷா உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பாபநாசத்தை சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,"நான் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். என் மனைவி உஷா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நானும், மனைவியும் 7.3.2018ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றோம். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸார் எங்களை நிறுத்தினர். நான் போலீஸார் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் பைக்கை நிறுத்தினேன். பின்னர் பைக்கிற்கு உரிய ஆவணங்களை காண்பித்தேன்.

பின்னர் பைக்கை எடுத்த போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜர் மோசமான வார்த்தைகளால் திட்டி பைக்கை பல முறை எட்டி உதைத்தார். இதில் பைக்கில் பின்னால் இருந்த என் 3 மாத கர்ப்பிணியாக உஷா கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் காமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் 3000 பேர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்தனர்.

என் மனைவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு பாய்லர் பிளான்ட் காவல் நிலையத்தில் இருந்து குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரும் திருச்சி மாநகர் காவல் பிரிவுக்கு உட்பட்டவர்கள் தான். திருச்சி போலீஸார் ஆய்வாளர் காமராஜை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மருத்துவர்களை பயன்படுத்தி என் மனைவி தொடர்பாக அவதூறு தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த வழக்கை போலீஸார் சரியாக விசாரிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே என் மனைவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்"என மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.