தமிழ்நாடு

திருவாரூர்: கமலாலயக் குள சுற்றுச் சுவரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த என்ஐடி குழு

திருவாரூர்: கமலாலயக் குள சுற்றுச் சுவரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த என்ஐடி குழு

JustinDurai
திருவாரூர் மாவட்டத்தின் கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவற்றின் உறுதித்தன்மையை திருச்சி NIT குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக சுமார் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புகழ் பெற்ற தியாகராஜர் கோவிலின் கமலாலயக் குளம் தென்கரை சுவர் சுமார் 100 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. அதன் பிறகு பெய்த கனமழையின் காரணமாக அருகிலிருந்த தென்கரை சுற்றுச்சுவர் சுமார் 300 அடி நீளத்திற்கு உள்வாங்கியது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, திருவாரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர்  கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவறை ஆய்வு செய்தனர். 
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்ய வரும்போது விரைவில் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் தொழில்நுட்பக் குழு ஒன்று திருவாரூர் கமலாலயக் குளத்தின் நான்கு கரைகளையும் ஆய்வு செய்து. இனி இதுபோல் சம்பவம் நிகழாதவாறு தரமான முறையில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று திருச்சி என்ஐடி-யில் இருந்து வந்த கட்டிடக்கலை நுட்ப பேராசிரியர்கள் சரவணன் மற்றும் முத்துக்குமரன் உள்ளிட்டோர் கமலாலயக் குளத்தின் நான்கு பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். இடிந்து விழுந்த பகுதி , இடியும் நிலையில் உள்ள பகுதி ,மீதம் இருக்கும் பகுதிகள் முதலானவற்றை ஆய்வு செய்தார்கள். மேலும் அவர்கள் கமலாலய குளத்தில் படகில் சென்று உட்புறமாகவும் ஆய்வு செய்தனர். இது குறித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.