தமிழ்நாடு

நுரையீரலில் சிக்கிய சப்போட்டா விதை - வெற்றிகரமாக அகற்றி திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை

நுரையீரலில் சிக்கிய சப்போட்டா விதை - வெற்றிகரமாக அகற்றி திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை

webteam

நுரையீரலில் சிக்கிய சப்போட்டா விதையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த செம்பரை கிராமத்தைச் சேர்ந்த மார்ட்டின் மேரி(58) என்ற பெண் சப்போட்டா சாப்பிடும்போது தவறுதலாக சப்போட்டா பழத்தின் விதையை விழுங்கி இருக்கிறார். சப்போட்டா பழ விதை மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விதையை விழுங்கிய நிலையில், அது வலது பக்கம் நுரையீரலின் அடிப்பாகத்திற்கு சென்றுவிட்டது. இடது பக்க நுரையீரல் இயங்கி வந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் குறைவாகவே இருந்துள்ளது.

இந்நிலையில் மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள்,
மூச்சுத்திணறலுக்கு ஆக்சிஜன் செலுத்தி, கடந்த 15ஆம் தேதி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன், சுந்தர் ராமன் மற்றும் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் தலைமையில் மயக்க மருத்துவர்கள் சீனிவாசன், அறிவரசன் ஆகியோர் இணைந்து flexible bronchoscopy செய்து சப்போட்டா பழ விதை இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

இரண்டு மாதங்கள் அதே இடத்தில் இருந்ததால் மூச்சுக்குழாயின் உட்புறம் காயம் ஏற்பட்டு granulation tissue பாதிக்கப்பட்டு, சதை பிடிப்புடன் ரத்தம் வெளியேறுதலும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி Tracheostomy செய்துபார்த்து, அதன் வழியாக Bronchoscopy செய்து, மயக்க மருத்துவர்கள் உதவியுடன் சப்போட்டா பழ விதையை வெளியே எடுத்து அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழுவிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற அறுவைசிகிச்சை செய்தால் ஐந்து முதல் 10 லட்சம் வரை செலவாகும் நிலையில், அரசு மருத்துவர் குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவைசிகிச்சையை செய்துள்ளதாகவும், உணவு சாப்பிடும்பொழுது சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, பேசக்கூடாது, சிரிக்க கூடாது, படுத்துக் கொண்டே உணவு உட்கொள்ளக் கூடாது, குழந்தைகளுக்கு படுத்துக் கொண்டு பால் ஊட்டக்கூடாது எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற சிக்கல் ஏற்படும் பட்சத்தில் மாதக்கணக்கில் காத்திருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ள நிலையில் மக்கள் தயக்கமின்றி வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.