செய்தியாளர்: சந்திரன்
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையம் அருகில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கேஎன்.அருண்நேரு அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருஉருவச் சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்....
கலைஞர் கொள்கைகளை லட்சியங்களை ஒவ்வொரு தொகுதியிலும் கொண்டு போய் சேர்க்கிறோம். அவருடைய திட்டங்களை செயல்படுத்துகிறோம். எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை வைப்பதா என இபிஎஸ் கேட்கிறார், நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதற்கு பதிலாக கர்ப்பான்பூச்சி பெயரையா வைப்பது. நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும். உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி எதற்கு கொடுத்தீர்கள் என கேட்பதற்கு இபிஎஸ்-க்கு தகுதி கிடையாது.
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை பரப்புரையில் ஆரம்பிக்க திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி கொடுத்தீர்கள், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திருச்சியில் பேசியபோது எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு 100 கோடி கேட்கிறார்கள் என பேசியுள்ளார், எந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்கா என தெரியவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்க போகிறது. திமுக தலைவர் தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்” என்று உதயநிதி பேசினார்.