தமிழ்நாடு

திருச்சி: தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த இளைஞர்களை திருப்பி அனுப்பியதால் வாக்குவாதம்

திருச்சி: தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த இளைஞர்களை திருப்பி அனுப்பியதால் வாக்குவாதம்

kaleelrahman

கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்தவர்களை திருப்பி அனுப்பிய டிஆர்ஓவுடன் வாங்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகரில் இன்று 18 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல் அனுப்பப்பட்டது. இதனையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டபம் உட்பட மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட அலுவலகங்களில், இன்று காலை 7 மணியிலிருந்து 10 மணிவரை தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், கூடுதலாக 16 வகையான முன்களப் பணியாளர்களுக்கும் தற்போது முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முகாமில் 10 மணி வரை யாரும் பெரிதளவில் பங்கேற்றவில்லை. ஆனால், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திடீரென இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வரத் துவங்கினர்.

திடீரென வந்த கூட்டத்தை சமாளிக்க மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் நேரில் வந்து, வங்கி ஊழியர்கள், மருந்து விற்பனையாளர்கள், ஹோட்டலில் பணிபுரிபவர்கள், காய்கறி விற்பவர்கள், மின்சார வாரியத்தில் பணியாற்றுபவர்கள் என தற்போது கோவிட் தொற்று ஊரடங்கு காலத்தில் பணியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டு மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்து வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியதால், இளைஞர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசும், தமிழக அரசும் கோவிட் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள இங்கு வந்தால் இப்போது இல்லை என குறிப்பிடுவது என்ன நியாயம் என்ற கேள்வியும் எழுப்பினர்.