திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே நேற்று நடந்த மோதல் தொடர்பாக 28 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களும் இடையே நடந்த மோதலில், கட்டைகள், கற்கள், பாட்டில்கள் போன்றவற்றை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 15 பேர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த உதவி ஆணையர் மணிகண்டன் மாணவர்களிடையே விசாரணை நடத்தினார். இதையடுத்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் மீதும், இறுதி ஆண்டு மாணவர்கள் 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட 28 மாணவர்களையும் 7 நாட்கள் சிறையில் அடைக்க, நீதிபதி சோமசுந்தரம் உத்தரவிட்டார். 28 மாணவர்களையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.