தமிழ்நாடு

திருச்சி: நுழைவு வரி செலுத்தாமல் தமிழகத்திற்குள் வந்த குஜராத் மாநில பேருந்து பறிமுதல்

திருச்சி: நுழைவு வரி செலுத்தாமல் தமிழகத்திற்குள் வந்த குஜராத் மாநில பேருந்து பறிமுதல்

kaleelrahman

நுழைவு வரி செலுத்தாமல் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த குஜராத் மாநில பேருந்து திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்திலிருந்து 41 பக்தர்களுடன் ஆன்மிக சுற்றுலா வந்த பேருந்து ஒன்று, திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கிச் சென்றது. அப்போது திருச்சி பிராட்டியூர் அருகே வந்தபோது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பேருந்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அந்த பேருந்து 'நுழைவு வரி' செலுத்தாமல் தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேருந்தின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் வந்தவர்கள் அபராதம் செலுத்த தங்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். உடனே அதிகாரிகள் பேருந்தை பறிமுதல் செய்து, பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து பேருந்தில் வந்த 41 பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பிராட்டியூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலேயே காத்துக் கிடந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதன்பிறகு நுழைவு வரி ரூ.40,500-ஐ குஜராத் பயணிகள் ஆர்டிஓ அலுவலகத்தில் அபராதமாக செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த பேருந்து விடுவிக்கப்பட்டது.