தமிழ்நாடு

திருச்சி: புஷ்வானமான வெடியை கையில் எடுத்தபோது வெடித்ததில் சிறுவனின் 3 விரல்கள் துண்டிப்பு

திருச்சி: புஷ்வானமான வெடியை கையில் எடுத்தபோது வெடித்ததில் சிறுவனின் 3 விரல்கள் துண்டிப்பு

kaleelrahman

மண்ணச்சநல்லூர் அருகே வெடிக்காத வெடியை கையில் எடுத்தபோத வெடித்ததால சிறுவனின் 3 கைவிரல்கள் துண்டானது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழிஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்த மருதை - லட்சுமி தம்பதியின் ஒரே மகன் சூர்யா (16). மருதை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்யும் லட்சுமியும் மகன் சூர்யாவும் தனியாக வசித்து வருகின்றனர். 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள சூர்யா, தற்போது ஜேசிபி ஆப்ரேட்டர் பயிற்சி பெற்று வருகிறார்.



இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து வருடாந்திர பூஜை நேற்று நடைபெற்றது. இதையடுத்து காலையில் பூஜைகள் முடிந்த பிறகு மாலையில் தீபாவளிக்கு வாங்கி மீதமிருந்த வெடிகளை தன் வீட்டிலிருந்து எடுத்து வந்த சூர்யா, கோயில் முன்பு வெடித்துள்ளார்.

அப்போது ஒருவெடி வெடிக்காமல் இருந்துள்ளது. அந்த வெடியை சூர்யா எடுத்துள்ளார். அப்போது திடீரென வெடி வெடித்ததில் சூர்யாவின் 3 கைவிரல்கள் சிதறியது. வலியால் அலறித் துடித்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சூர்யாவுக்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.