ஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்து உள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கிற்கு வெளியே மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் ஒரு பெரிய விபத்து நடப்பதை தடுத்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த சிசிடிவி காட்சியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரும் பேருந்தும் ஒன்றை ஒன்று மோதி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து அந்தப் பேருந்தும் காரும் சாலையிலிருந்து திரும்பி பெட்ரோல் பங்க் பக்கம் பாய்கிறது. அப்போது நிலை தடுமாறிய பேருந்து ஒரு புறம் சாய்ந்தது. பெட்ரோல் பங்கிற்கு வெளியே இருந்த மரத்தின் மீது சாய்ந்த பேருந்தை, கீழே விழாமல் மரம் பாதுகாத்தது. இதனால் கார் மீது பேருந்து சாயாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அத்துடன் கட்டுபாட்டை இழந்த காரும் மரத்தில் மோதி எந்தவித சேதமும் இல்லாமல் நின்றது. இதனையடுத்து பேருந்து மற்றும் கார் ஆகிய இரண்டு வாகனங்களிலும் பயணித்த அனைவரும் எந்தவித உயிர் சேதமும் இன்று பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மரம் நட்டால் அது சுற்று சூழலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் தற்போது மரம் ஒன்று பல உயிர்களை காத்திருப்பது பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.