மதுராந்தகம் அருகே பேருந்தில் ஏற்பட்ட தகராறில், பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநரின் உடலுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.
நேற்றைய தினம் சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில், மதுபோதையில் நபர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் அப்பேருந்து நடத்துநர் பெருமாள் டிக்கெட் கேட்டு உள்ளார். `டிக்கெட் எடுக்க முடியாது’ என மது போதையில் இருந்த நபர் நடத்துனரிடம் தெரிவித்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் அந்நபர் தாக்கியதில் நடத்துனர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த அந்த பயணி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் பகுதியில் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து நடத்துநர் பெருமாள் 54 மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற பயணி முருகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் உயிரிழந்த நடத்துநர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் சென்று வழங்கினார்.