தீபாவளிக்கு 20,567 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை தொடர்பாக இயக்கப்படும் சிறப்புக பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை இன்று எம்.ஆர்.விஜயபாஸ்கார் வெளியிட்டார். அதில், “தீபாவளிக்கு சென்னையிலிருந்து 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து சென்னைக்கும், மற்ற ஊர்களுக்கும் திரும்புவதற்காக 11,842 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்ற ஆண்டு சென்னையிலிருந்து 20,315 பேருந்துகள் இயக்கப்பட்டது. திரும்பி வருவதற்கு 11,490 பேருந்துகள் இயக்கப்பட்டிருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் 1.11.2018 ஆம் தேதி முதல் 5.11.2018 வரை நடைபெறும். கோயம்பேடு பணிமனையில் 26 கவுண்டர்களும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் தலா ஒரு கவுண்டர் என மொத்தம் 30 கவுண்டர்களில் முன்பதிவுகள் செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு இதுவரை 30.274 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்” என்றார்.
இதைத்தொடர்ந்து, “ இந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் புறப்படவுள்ளன. கோயம்பேடு மற்றும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டு அண்ணாநகர் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கமாக இயக்கப்பட்ட பேருந்துகள், இந்த ஆண்டு மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கடந்த ஆண்டு சைதாப்பேட்டையிலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், இந்த ஆண்டு மக்களின் கோரிக்கையை ஏற்று கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்” என்று அறிவித்தார்.
மேலும், “திருவண்ணாமலை செல்லக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதால், அந்தப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும். பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தக் கூடாது என தெரிவித்துள்ளோம். அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம். போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவைத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பஸ் பாஸ் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் அவை வழங்கப்படும். இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை. மாணவர்களை பேருந்தில் அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். டீசல் இல்லாத மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் 100 மின்சாரப் பேருந்துகளை அரசு வாங்க இருக்கிறது. இதுதொடர்பாக ஜெர்மன் நாட்டின் அரசுடன் பேசி வருகிறோம். சென்னைக்கு 80 பேருந்து கோவை நகரில் 20 இயக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
Read Also -> பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு