தமிழ்நாடு

தடைகளை தாண்டி போலீஸ் ஆக ஜொலிக்கும் திருநங்கை சுபஸ்ரீ..!

தடைகளை தாண்டி போலீஸ் ஆக ஜொலிக்கும் திருநங்கை சுபஸ்ரீ..!

webteam

பிரித்திகா யாசினியைத் தொடர்ந்து மற்றுமொரு திருநங்கை, காவல்துறையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். சுபஸ்ரீ என்னும் திருநங்கைக்கு காவல் பணிக்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி வெற்றி கண்டுள்ளார் சுபஸ்ரீ.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என்றால் எத்தனை பேருக்கு தெரியும் எனத் தெரியாது. ஏனெனில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்தச் சமூகம் வேறு பல பெயர்களை அளித்திருக்கிறது. அவை எதுவும் அவர்களை உயர்வாகக் கூறும் சொற்களல்ல. எந்த வாய்ப்புகளையும் வழங்காமல் மூன்றாம் பாலினத்தவரை தவறான பாதைக்கு தள்ளிவிட்டு, அவர்கள் மீதே குற்றம் சொல்லி பழக்கப்பட்ட பலருக்கும் மத்தியில்தான் போராடி வென்றிருக்கிறார் சுபஸ்ரீ.‌

ஈரோட்டைச் சேர்ந்த அவர் திருநங்கை என்பதால் பெற்றோரின் ஆதரவை இழந்தார். சென்னை வந்த சுபஸ்ரீ சக திருநங்கைகளுடன் இணைந்து வாழத் தொடங்கினார். பொருளாதார சிக்கல் காரணமாக தொடக்கத்தில் தடுமாற்றங்களை சந்தித்த சுபஸ்ரீ, பின்னர் வாழ்க்கையில் எப்படியாவது போராடி வெற்றிபெறும் என்ற எண்ணத்தை மனதுக்குள் விதைத்தார்.

(படத்தில்- திருநங்கை பிரித்திகா யாசினி)

இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்ற பிரித்திகா யாசினியை தனது முன் உதாரணமாக எடுத்துக் கொண்டார். அதன்படி காவல்துறையில் சேர விரும்பிய சுபஸ்ரீ, அதற்கான தேர்வையும் எழுதினார். கஷ்டப்பட்டு தேர்வு எழுதியதால் அவர் நினைத்தப்படி வெற்றியும் கிடைத்தது. தற்போது காவல் பணிக்கான ஆணையை முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து பெற்றுள்ளார். பிரித்திகா யாசினியை முன்னுதாரணமாகக் கொண்டே காவல் பணியில் சேர்ந்ததாக இப்போது பூரிப்புடன் கூறுகிறார் சுபஸ்ரீ.

இந்த வெற்றிக்கு பின் தன்னை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சுபஸ்ரீ நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்துள்ள சுபஸ்ரீ பயிற்சிக்குப்பின் மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார். பிரித்திகா யாசினி மற்றும் சுபஸ்ரீ ஆகியோரின் வெற்றி சாதிக்க துடிக்கும் திருநங்கைகளுக்கு சிறந்த முன்னுதாரணம்.