வாழ்வாதாரத்திற்கு வழியின்றி பிறரை எதிர்நோக்கியிருக்கும் பல திருநங்கைகளுக்கு மத்தியில், பிழைப்புக்காக உணவகம் நடத்தி முன்னுதாரணமாக உள்ளார் திருநங்கை ஒருவர். ஆனால், ஆதரவை எதிர்நோக்கி சமூக வலைத்தளத்தில் அவர் எழுப்பியுள்ள கேள்வி, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
சென்னை எழும்பூரில் ‘டேஸ்டி ஹட்’ என்ற சிறிய கடையை, செம்பருத்தி திருநங்கைகள் சுய உதவிக்குழு, தனியார் கல்லூரியின் உதவியுடன் வாழ்வாதாரத்திற்காக திருநங்கை சாய்னா பானு நடத்தி வருகிறார். பிற கடைகளை ஒப்பிடுகையில். இவரது கடையில் குறைந்த விலையில் ருசியான உணவு கிடைக்கிறது. 30 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி, 50 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி, 35 ரூபாய்க்கு சிக்கன் 65 என வகை வகையான உணவு கிடைக்கிறது.
தமக்கு அதிக லாபம் வேண்டாம், அதிக வாடிக்கையாளர்களே வேண்டும் என்பதே சாய்னா பானுவின் தாரக மந்திரமாக உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட கருத்து, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆண், பெண் வைத்திருக்கும் கடைகளுக்கு செல்வீர்கள்? திருநங்கை வைத்திருக்கும் கடைக்கு வருவீர்களா? சாப்பிடுவீர்களா? என திருநங்கை சாய்னா பானு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்க வேலை செய்ய மாட்டீர்களா? உழைக்க மாட்டீர்களா? என ஏன் சொல்கிறீர்கள்? எனவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். உடலில் தெம்பு உள்ளது. உழைத்து உண்ணும் எண்ணமும் ஏராளம். ஆனால், சமூகத்தினரின் ஆதரவும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை என்பது தான் சாய்னா பானுவின் ஆதங்கம்.
இதுதொடர்பாக, புதிய தலைமுறை ‘நியூஸ் 360 டிகிரி’ செய்திப் பகுதியில், சாய்னா பானுவின் ஆதங்கம் குறித்த முழு வீடியோவை காணலாம்.