திருநங்கை சோலு pt desk
தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் முறையாக இயன்முறை மருத்துவ மையத்தை தொடங்கியுள்ள திருநங்கை - யார் இவர்?

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் திருநங்கை ஒருவர், இயன்முறை மருத்துவம் மற்றும் அழகியல் மையத்தை தொடங்கியுள்ளார்.

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் திருநங்கை சோலு. இயன்முறை மருத்துவம் படித்த இவர், 6 ஆண்டுகளாக செல்லம்பட்டியிலுள்ள வட்டார வள மையத்தில் சிறப்பு குழந்தைகள் பிரிவில், தற்காலிக இயன்முறை மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற இவரது கோரிக்கை நிறைவேறாத நிலையில் மதுரை அண்ணா நகர் பகுதியில், ராலக்ஸ் என தனது தாயின் பெயரில் இயன்முறை மருத்துவம் மற்றும் அழகியல் மையம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

திருநங்கைகளும், திருநம்பிகளும் சிகிச்சை பெறுவதற்கு கஷ்டப்படுவதால், இந்த மையத்தை தொடங்கியுள்ளதாக கூறியுள்ள அவர், பொதுமக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறப்பு குழந்தைகளுக்காக இயன்முறை சிகிச்சையும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். திருநங்கை என்பதால் தான் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டதாக கூறும் அவர், சிறிய அளவிலான தனது கிளினிக்கில் திருநங்கைகளுக்கான பணி வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.