vijayalakshmi puthiathalaimurai
தமிழ்நாடு

தங்கைக்காக நியாயம் கேட்க வந்த திருநங்கைக்கு கத்திகுத்து.. சிகிச்சைக்கு மறுத்து போராடியதால் பரபரப்பு

கத்தியால் குத்தப்பட்ட திருநங்கை, தன்னை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி 5 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

யுவபுருஷ்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இன்பராஜ் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா (24) ஆகியோர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட பின்னர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். திருமணம் ஆகி இவர்களுக்கு அனிருத் (2) என்ற குழந்தை உள்ளது. இன்பராஜ் குருசாமிபாளையத்தில் உள்ள பன்றி இறைச்சிக் கடையில் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம். இவர் தினமும் மது போதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் நேற்று அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்த இன்பராஜ் மனைவி ரம்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, இன்பராஜ் ரம்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. தன்னை தாக்கியது தொடர்பாக, தனது திருநங்கை சகோதரி ஜெயலட்சுமிடம் தகவல் தெரிவித்துள்ளார் ரம்யா. தொடர்ந்து, சேலத்தில் இருந்து வந்த ஜெயலட்சுமி இன்பராஜை சந்தித்து, ‘எதற்காக என் தங்கையை அடித்தீர்கள்’ என்று கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இன்பராஜ், தான் மறைத்து வைத்திருந்த மிகக்கூர்மையான கத்தியை கொண்டு ஜெயலட்சுமி மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரையும் தாக்கி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. பின்னர் ஜெயலட்சுமி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்துள்ளார்.

காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் சம்பவம் நடைபெற்ற இடம் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்டதாகவும், அங்கு சென்று புகார் அளிக்குமாறும் சொன்னதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு காவல் உதவி ஆய்வாளர் தங்கம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் விஜயலட்சுமியோ, அங்கு சிகிச்சை பெறாமல் அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் 5மணி நேரத்திற்கும் மேலாக ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்தார்.

தொடர்ந்து, புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே காவல் ஆய்வாளர் கோமதி ஆண்டகளூர்கேட் பகுதிக்கு காயமடைந்த திருநங்கை மற்றும் பாதிக்கப்பட்ட ரம்யாவை அழைத்து வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தங்கம், பாதிக்கப்பட்ட ரம்யாவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த காவல் ஆய்வாளர் கோமதி தனது வாகனத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாததால், காவல் ஆய்வாளர் பாதிக்கப்பட்ட ரம்யாவை திரும்பி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த நிலையில், தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இன்பராஜ், இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.