வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதையடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 156 ஆண்டுகால பழமையான ரயில்வே பாலத்தில் கடந்த 23ஆம் தேதி விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏராளமான ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். விரிசல் ஏற்பட்ட பகுதி மற்றும் மண்ணரிப்பால் சேதமடைந்த தூண்களை சீரமைக்கும் பணியில் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டுவந்தனர்.
சீரமைப்புப்பணிகள் நேற்று மாலை நிறைவடைந்த நிலையில், முதற்கட்டமாக வெறும் ரயில் எஞ்சின் இயக்கி பார்க்கப்பட்டது. பின்னர் 2 சரக்கு ரயில்களை பாலத்தின் மீது மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், எந்த பாதிப்பும் ஏற்படாததால், ஊழியர்கள் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில், பொன்னையாற்றின் பாலத்தில் இயக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து சீரடைந்த நிலையில், இரவு பகலாக பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் பாராட்டினார்.