கஜா புயலை ஒட்டி தமிழகத்தில் சில ரயில் சேவைகளில் இன்று மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
கஜா புயல் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் உள்ளதாகவும், இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி - ராமேஸ்வரம் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் இடையே இயங்கக் கூடிய பயணிகள் ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திலிருந்து சென்னை புறப்படவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி புறப்பட வேண்டிய விரைவு ரயில் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒக்காவிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரயில் மதுரை வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - ஒக்கா விரைவு ரயில் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், வேளாங்கண்ணி மற்றும் மன்னார்குடி ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து திருச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.