தமிழ்நாடு

போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள்.. ஆறுமுகத்தின் பகீர் பின்னணி

webteam

மாணவி லோகேஸ்வரியின் மரணத்திற்கு காரணமான போலி பயிற்சியாளர் ஆறுமுகம், தனிநபராக மோசடி செய்கிறாரா அல்லது அவர் மோசடி கும்பலில்‌ ஒரு அங்கமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கல்லூரி மாணவி லோகேஸ்வரியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர். ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த இவருக்கு போலியோவால் இடது காலில் பாதிப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கன்னியாகுமரியில் பள்ளி விடுதி ஒன்றில் வார்டனாக பணியாற்றிய ஆறுமுகம் டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை தொலைதூர கல்வியில் படித்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பெயரில் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வந்துள்ளார். 1047 கல்லூரிகளில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி கொடுத்துள்ளதாக விசாரணையில் கூறியுள்ளார். 

அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் என்பதற்கான ஆவணம் தயாரிக்க ஆறுமுகத்திற்கு உதவியதாக, ஈரோட்டை சேர்ந்த அசோக் மற்றும் தாமோதரன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறுமுகத்திற்கு உதவியதாக மொத்தம் 5 பேரிடம் விசாரணை நடந்து வரு‌கிறது. இது போன்ற பயிற்சிகளுக்கு உதவினால் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அரசு வேலை கிடைக்க இது உதவும் என்றும் இவர்களிடம் ஆறுமுகம் கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டுக்கு முன் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய வேறு ஒரு குழுவில் ஆறுமுகம் வேலை செய்ததாக சொல்லப்படுகிறது. அந்தக் குழுவை சேர்ந்தவர்கள் யார்? உண்மையிலேயே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்தவர்கள் தானா அவர்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது.