கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் pt desk
தமிழ்நாடு

கல்லிடைக்குறிச்சி | நிற்காமல் சென்ற ரயில் - பயணிகள் கடும் அவதி!

webteam

செய்தியாளர்: புருஷோத்.V

நெல்லையில் இருந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு, நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் ராஜபாளையம் விருதுநகர், கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு திங்கட்கிழமை காலை 7:15 மணிக்கு சென்றடையும். நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் பொதுமக்கள் முன்பதிவு செய்து சென்று வருகின்றனர்.

Rail

இந்நிலையில், நேற்றிரவு 7:00 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதனால் கல்லிடைக்குறிச்சியில் இறங்க வேண்டிய பயணிகள், அம்பை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

இதே போல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து பழனி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல டிக்கெட் எடுத்து காத்திருந்த பயணிகள் அதிாச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு காத்திருந்த பயணிகள் உடனடியாக ரயில் நிலைய அதிகாரியிடம் ‘என்ன காரணதிற்காக ரயில் நிற்காமல் சென்றது?’ என கேட்டனர்.

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம்

இதையடுத்து நிலைய அலுவலர், மதுரை கோட்ட அலுவலரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரயிலை தவறவிட்ட பயணிகளை ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயிலில் ஏறி தென்காசி சென்றனர்.

இந்நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் ரயிலில் ஏறி பயணம் செய்தனர். இதனால் அந்த ரயில் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ரயில் நிக்காமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.