தமிழ்நாடு

3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம்: பயணிகள் கடும் அவதி

Rasus

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்றனர்.

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை செல்லக்கூடிய மின்சார ரயிலானது தினந்தோறும் 30 நிமிடங்கள் கால தாமதமாக வருவதாக தெரிகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள் தினசரி தாமதமாக செல்ல நேரிடுவதாக கூறி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலை கூடுவாஞ்சேரியில் மறித்து 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் பயணிகள் அவதியுற்றனர்.

ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “இரண்டு ரயில் பாதைகள் மட்டும் இருப்பதால் அதில்தான் மின்சார ரயில் மற்றும் தென்மாவட்ட ரயில்கள் இயக்க வேண்டும். மூன்றவாது பாதை அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணி முடியும் வரை தான் ரயில் தாமதம் இருக்கும். பிறகு இந்த பிரச்சனை தீர்ந்து விடும்” என்றனர். ஆனால் அதனை ஏற்று கொள்ளாத ரயில் பயணிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தால் ரயிலை இயக்க முடியாமல் ரயில்வே நிர்வாகம் திணறியது. இதனால் ஒட்டு மொத்த பயணிகளும் அவதியுற்றனர். 8.30 மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நீண்ட நேரம் புறப்படாமல் தாம்பரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டது. 8.20-க்கு துவங்கிய போராட்டம் 11.45-க்கும் நிறைவடைந்தது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் ரயில் சேவை முற்றிலும் முடங்கியது. இனி தாமதம் இல்லாமல் ரயில்கள் இயங்கும் என கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

கள நிலவரம்: செய்தியாளர் S. சாந்தகுமார்.