Tragic decision pt desk
தமிழ்நாடு

சென்னை: நண்பர்களுக்கு போன் போட்டு சொல்லிவிட்டு விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி – பின்னணி என்ன?

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை சாலிகிராமம் மதியழகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது 17 வயது இளைய மகள், கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் கல்லூரியில் இருந்து நண்பர்கள் சிலர் பதட்டத்துடன் மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மாணவியின் அக்கா, “ஏன் பரபரப்பாக வருகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

Death

அப்போது, “அவள் (கல்லூரி மாணவி) தற்கொலை செய்து கொள்வதாக எங்களுக்கு போனில் கூறினார். உடனடியாக அவரை பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியின் அக்காவும் மாணவியின் நண்பர்களும் நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கல்லூரி மாணவிக்கு கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது. அந்நபர் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மாணவிக்கே அனுப்பி, “இதையெல்லாம் சமூக வலைதளத்தில் பதிவிட போகிறேன்” என மிரட்டி வந்துள்ளார்.

Instagram reels

இதனால், மன வருத்தத்தில் இருந்த அவர் வகுப்பிலும் அழுது கொண்டே இருந்ததிருக்கிறார். பின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் தன் நண்பர்களுக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியிருக்கிறார். இவை அனைத்தையும் அவரின் நண்பர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், இன்ஸ்டாகிராமில் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மாணவிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற மிரட்டல்களால் பாதிக்கப்படுபவர்கள் தாமதிக்காமல் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணான 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும். பெண்கள் உதவி எண்ணான 1091 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.