தமிழ்நாடு முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை விதிக்கக் கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாமல்லபுரத்திற்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையின் போது, நீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர, விதிவிலக்கு அளிக்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தால் அதை அனைவரும் ஒரே மாதிரியாக பின்பற்ற வேண்டும், அதனால், தமிழ்நாடு அரசுக்கு பேனர் வைப்பதில் விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பேனர் கலாச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், சீன அதிபர் வந்து சென்றுவிட்டதால், தற்போது அது தொடர்பான மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.