தமிழ்நாடு

கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு

கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு

webteam

பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல், டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மதுரை, கோவை போன்ற பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. கோவையில் ஒரேநாளில் இரு முதியவர்கள் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

கோவை அருகே உள்ள போத்தனூர் பாரதி நகரை சேர்ந்தவர் வேலாயுதம். 65 வயதான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 11-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வேலாயுதம் இன்று உயிரிழந்தார். அதேபோல், கோவை நிலம்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிசாமி.  61 வயதான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 21 பேர், டெங்குவிற்கு 4 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேர் என 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பன்றிக் காய்ச்சலால் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.