25 ஆண்டுகளுக்கு மேலாக கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி இயக்கும் மிதிவண்டி சவாரி, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசியாக என்றும் இளமையாக திகழ்கிறது. அதிலும் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஏரியின் ரம்மியம் மற்றும் அழகு காண்பதற்கு மட்டுமல்லாது, சுத்தமானக் காற்றை சுற்றுலாப்பயணிகள் சுவாசிக்க ஏற்ற இடமாக இன்று வரை திகழ்ந்துவருகிறது. இளவரசியின் இதயமாக விளங்கும் ஏரி சுற்றுச்சாலையில், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புக் கடைகள், மிதிவண்டி நிறுத்தங்கள், குதிரை லாடங்கள் என அனைத்தும் சில வாரங்களுக்கு முன்னர் அரசால் அகற்றப்பட்டது.
சாலையோரக் கடைகள், குதிரை சவாரி என அனைத்தும் அகற்றப்பட்டதில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விரும்பும் மிதிவண்டி சவாரியும் முழுவதுமாக அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றிய நாளிலிருந்து, சில நாட்களாக குதிரைகளுக்கு தீனி போடக்கூட வழியில்லாமல், குதிரை ஓட்டுநர்கள் அவதியுற்றதை அறிந்த மாவட்ட நிர்வாகம், மனித நேய அடிப்படையில், குதிரை லாடங்களை மட்டும் முறைப்படுத்தி, ஏரிச்சாலையில் சுற்றுலாப்பயணிகள் குதிரை சவாரி செய்ய அனுமதித்தது.
அதன் பின்னர் மிதிவண்டி குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏரிச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் மிதிவண்டி சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏரிப்பகுதிக்கு படகு சவாரி செய்யவும், குதிரை சவாரி செய்யவும் வரும் சுற்றுலாப்பயணிகள், மிதிவண்டி இல்லாமல் பெரும் ஏமாற்றம் அடைந்து வ ருகின்றனர்.
தமிழக அரசு இதனை கவனத்தில் எடுத்து, ஏரிச்சாலையில் வாகன நெரிசல் ஏற்படாத வகையில், நகராட்சிப் பகுதிகளை கண்டறிந்து, அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு மிதிவண்டி சவாரி செய்ய அனுமதிக்குமாறு, அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரையிடம் கேட்டபொழுது, நகர்மன்ற கூட்டத்தில், மிதிவண்டி தேவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் உரிய நகராட்சி இடத்தில், மிதிவண்டிகளை நிறுத்த, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.