தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழு அடைப்பு

webteam

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை சில முக்கிய சேவைகள் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

அரசு போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளதால் பேருந்து சேவை பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது. எனினும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பேருந்து சேவை ஒரளவு பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பால் வினியோகஸ்தர்கள் நலச்சங்கம் போராட்டத்தில் பங்கேற்பதால் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. எனினும் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. வணிகர்கள், சிறுவியாபாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வாங்குபவர்கள் இன்றே வாங்கிக்கொள்ளலாம்.

திரையரங்குகளில் 2 காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. லாரிகள் ஓடாது. கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் போன்ற முக்கிய காய்கறி சந்தைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். மின்சார சேவை பாதிக்கப்படாது, பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும். விவசாயிகளுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சியான திமுக விடுத்துள்ள முழு அடைப்பு ‌போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.