டோல் கேட்  புதியதலைமுறை
தமிழ்நாடு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் வேதனை

webteam

செய்தியாளர்: ஆறுமுகம்

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சுங்கச் சாவடியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு

அதன்படி, கடந்த 15 ஆண்டுகளில் 14 முறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான புதிய கட்டண உயர்வு அறிவிப்பை டிடிபிஎல் (திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட்) நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கும் ஒரே நாளில் பலமுறை செல்வதற்கும் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாதத்திற்கு ஒரு முறை பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கான சலுகை கட்டணம் 1990 ரூபாயில் இருந்து 5 ரூபாய் உயர்த்தி 1995 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்லவும் ஒரே நாளில் பலமுறை செல்லவும் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மாதத்திற்கான கட்டணம் 3460 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 3490 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

பல அச்சு கொண்ட சரக்கு வாகனங்கள் தினசரி சென்று வரும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தி சலுகை கட்டணத்தில் செல்லும் வாகனங்களுக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 11 ஆயிரத்து 220 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

சுங்கச்சாவடி

தேசிய நெடுஞ்சாலையை சரிவர பராமரிப்பு செய்யாததால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாகவும், சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும் குற்றம் சாட்டிய ஓட்டுநர்கள் கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.