காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் நிற்காமல் சென்ற வாகனத்திடம் வரிவசூலிப்பதற்காக துரத்திச் சென்ற ஊழியர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனம் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. உடனடியாக நிற்காமல் சென்ற வாகன ஓட்டியிடம் சுங்கவரி வசூலிப்பதற்காக ஊழியர்கள் சிலர் துரத்திச் சென்றுள்ளனர். அவரை துரத்திப் பிடித்து அடித்து உதைத்த சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன்பிறகே தங்களுடன் வந்த வினோத் என்பவரை காணவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. வினோத்தை தேடிய போது ரயில்வே மேம்பாலத்திற்காக புறவழிச்சாலையின் நடுவே விடப்பட்டிருந்த இடைவெளியில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வினோத் உயிரிழந்தது தெரியவந்தது. புலிப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்துக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
எப்படியாவது வாகனங்களிடம் வரிவசூலித்தே ஆகவேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் கெடுபிடி செய்வதே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.