கீழாநிலக்கோட்டை PT
தமிழ்நாடு

வரலாற்றை திரும்பிப்பார்க்க வைக்கும் முக்கிய கோட்டைகள்; கீழாநிலக்கோட்டையின் இன்றைய அவலநிலை

இலங்கை மஹாவம்ச நூலின் படி ஒரு சிங்கம் பொன்னமராவதியில் இருந்து கீழாநிலை வரையும் அதைத்தாண்டி தஞ்சைமாவட்டம் மணல்மேல்குடிவரை ஓடியதாகவும் அதன்மூலம் சோழர், பாண்டியர்கள் தங்கள் எல்லைகளை 10,11ம் நூற்றாண்டுகளில் வகுத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Jayashree A

நாம் இன்று பார்க்கப்போவது கீழாநிலக்கோட்டை இக்கோட்டையானது அறந்தாங்கியிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

வரலாற்று சின்னமான இக்கோட்டையானது முற்றிலும் சிதலமடைந்து பரிதாப நிலையில் காணப்படுகிறது. மிகவும் பழமையான,பாரம்பரியமிக்க இக்கோட்டையை கட்டியது சோழரா இல்லை பாண்டியரா என்ற கேள்வி இன்று வரை தொடர்கிறது. கல்வெட்டுகள் ஏதும் கிடைக்காத நிலையில், சிங்கள புனித நூலான மகாவம்சம் மற்றும் குலவம்ச நூல்களில் இக்கோட்டையானது சோழர், பாண்டியர்களின் எல்லை இராணுவமாக செயல்பட்டதை பற்றி விவரிக்கிறது.

இலங்கை மஹாவம்ச நூலின் படி ஒரு சிங்கம் பொன்னமராவதியில் இருந்து கீழாநிலை வரையும் அதைத்தாண்டி தஞ்சைமாவட்டம் மணல்மேல்குடிவரை ஓடியதாகவும் அதன்மூலம் சோழர், பாண்டியர்கள் தங்கள் எல்லைகளை 10,11ம் நூற்றாண்டுகளில் வகுத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கோட்டையின் மதில் சுவர்

இலங்கை மஹாவம்ச நூலின்படி பாண்டிய நாட்டின் வடக்கெல்லையாக தற்போதுள்ள பொன்னமராவதி திகழ்ந்துள்ளது. இங்கிருந்து கீழாநிலை, மணமேல்குடி (கிழக்கு கடற்கரை வரை ) வரை கிபி 10, 11 ம் நூற்றாண்டு வரை சோழ, பாண்டிய நாட்டின் எல்லைகளாக திகழ்ந்துள்ளன. சிங்கள நாட்டினரின் தென் தமிழ்நாட்டை கைப்பற்றும் விதமாக படையெடுத்து வந்த சமயம் அவர்களை தடுத்து பல்லவர்கள் இக்கோட்டையை தங்கள் வசம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

பிறகு 17ம் நூற்றாண்டில் அறந்தாங்கி தொண்டைமான் கட்டுப்பாடிலும், 1674 ல் தொண்டைமான் வசமிருந்த இக்கோட்டையானது பிறகு தஞ்சை நாயகரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது.

சிதலமடைந்த கோட்டை

அதன் பிறகு கிழவன் சேதுபதியின் ஆட்சியில் இக்கோட்டை சேதுபதியின் கண்காணிப்பில் இருந்ததாகவும், பின்னர் மராட்டியர்கள் வசம் இக்கோட்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. மீண்டும் 1736 ல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மராட்டிய படைகளை கீழாநிலை கோட்டையிலிருந்து விரட்டி அடிக்க மீண்டும் அக்கோட்டை புதுக்கோட்டை தொண்டைமான் வசம் வருகிறது. பிறகு ஆங்கிலேயர்களின் படையெடுப்பிற்கு ஆளானது.

இன்று இக்கோட்டையானது சிதலமடைந்து வெளிப்புற மதில் சுவருடன் காட்சியளிக்கிறது. கோட்டையின் உள் புறம் ஒரு அகழி காணப்படுகிறது. இதை தவிர கோட்டையினுள் காவல் தெய்வம், அம்மன் ஆலயம் மற்றும் அனுமன் ஆலயம் ஆகியவை காணப்படுகிறது. கோட்டையின் நுழைவாயிலிலிருந்து கோபுரத்திற்கு செல்வதற்கு ஒரு படிக்கட்டு பாதை ஒன்றும் அதன் உச்சியில் பீரங்கி ஒன்றும் உள்ளது. ஆனால் இன்றைய நிலையில் இக்கோட்டையை சுற்றியும், கோட்டையில் உள்ளேயும் வெளியேயும் கருவேல மரங்கள் புதற்கள் மண்டி கிடக்கின்றன.

பீரங்கியின் ஒரு பகுதி

சமீபத்தில் இக்கோட்டையின் உள்புறம் மின் கம்பங்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட இடத்தில் அதிக அளவில் பீரங்கி குண்டுகள் கிடைத்துள்ளது. இதனால் இக்கோட்டை சேதுபதி அரசோ அல்லது ஆங்கிலேயர்களோ ஆயுத கிடங்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.