திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் மற்றும் தேர் திருவிழா நடத்துவது குறித்து இன்றைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நவம்பர் 29ஆம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா, அதனைத்தொடர்ந்து தேரோட்டம் ஆகியவற்றை நடத்தக்கோரி விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு பூரி ஜெகன்நாதர் திருவிழா நடந்தது போல, அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தீபத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து கோயில் நிர்வாகம், இந்துசமய அறநிலையத்துறை, காவல்துறை போன்றவர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, இறுதி முடிவு இன்றைக்குள் எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், தீபத் திருவிழா குறித்து எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.