தமிழ்நாடு

'கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்' - இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவு தினம் இன்று

'கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்' - இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவு தினம் இன்று

JustinDurai

சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை - ஆதிஅம்மாள் தம்பதியின் மகனாக 1859ஆம் ஆண்டு பிறந்த சீனிவாசன், தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி ஆவார். அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்தவர். 'கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்' என்று முழங்கி, விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடினார் இரட்டைமலை சீனிவாசன்.

சாலைகள், பொதுக் கிணறுகள், ஆலயங்களை ஏனைய சமூகத்தினர் பயன்படுத்துவது போன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்று அரசியல் சட்ட நிர்ணய சபையில் தீர்மானம் கொண்டுவந்து, அதை அரசாணையாகவும் வெளியிடச் செய்த மகத்தான தலைவர் இரட்டைமலை சீனிவாசன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வடதுருவத்தில் அண்ணல் அம்பேத்கரும் தென்துருவத்தில் அவருக்கு முன்னோடியாக இரட்டைமலை சீனிவாசனும் உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்.

அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தீண்டாமை ஒழிப்புக்காகத் தளர்வில்லாமல் அரும்பாடுபட்டு வந்த இரட்டைமலை சீனிவாசன், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனது 86வது வயதில் 18/09/1945 அன்று காலமானார். இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவுதினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரின் புகழை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: "ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால்.." - சீமான் கடும் எச்சரிக்கை